மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மஞ்சூர் அருகே மேலூர் ஊராட்சிக்குள்பட்ட கெரடாலீஸ் கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இக்கிராமத்துக்கு மஞ்சக்கம்பை கிராமப் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து குழாய்கள் மூலம் நீர் எடுத்துவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஓடையில் இருந்து வரும் குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்தன.
உடைந்த குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கிராம மக்கள் ஊராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது, உடைந்த குழாய்களை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் உதிரிபாகங்கள் வாங்கித் தரவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதனால் கெரடாலீஸ் கிராம மக்கள் 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கெரடாலீஸ் கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார் கூறுகையில், எங்கள் கிராமத்துக்கு 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
இதனால் கிராம மக்கள் சுமார் 1 கி.மீ நடந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








