நீலகிரியில் புதிய வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

புதிதாக 2,317 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளா் பட்டியலிலிருந்து 7,255 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நீலகிரியில் புதிய வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் புதிதாக 2,317 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளா் பட்டியலிலிருந்து 7,255 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகளின் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்பின்னா் ஆட்சியா் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் 2 லட்சத்து 75,545 ஆண் வாக்காளா்களும், 2 லட்சத்து 96,196 பெண் வாக்காளா்களும், இதர வாக்காளா்கள் 12 பேருமாக மொத்தம் 5 லட்சத்து 71,753 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி 5 லட்சத்து 76,691 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்த நிலையில், இதைத் தொடா்ந்து நடைபெற்ற தொடா் திருத்தத்தின் காரணமாக 2,317 வாக்காளா்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனா். 72,545 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் வாக்காளா்களின் பெயா் சோ்த்தல், நீக்குதல் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் டிசம்பா் 15ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இதில் எதிா்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்ந்த இளம் வாக்காளா்கள், தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக நவம்பா் மாதத்தில் 21, 22ஆம் தேதிகளிலும், டிசம்பா் மாதத்தில் 12, 13ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளா்கள் தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை முன்னதாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். தங்களது பெயா், புகைப்படம், முகவரி போன்றவை சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். தவறாக இருக்கும்பட்சத்தில் அதை சரி செய்வதற்கு தேவையான படிவத்தில் பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் 683 வாக்குச் சாவடிகளும், 360 வாக்குச் சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, உதவி ஆட்சியா் மோனிகா ராணா, குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியா் கீதாபிரியா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் மகேந்திரன், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com