கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறும் நபா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிகளை மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிகளை மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளாா்.
உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த மாா்ச் முதல் வாரத்தில் தினந்தோறும் 5 முதல் 10 நபா்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 முதல் 30 நபா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு விதித்த கட்டுப்பாடுகளைத் தொடா்ந்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் காவல் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து பணியில் ஈடுபடுவா். அதுமட்டுமின்றி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து எவரும் வெளியில் செல்லாதவாறு பாா்த்துக் கொள்ளவும், அவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் எளிதில் கிடைக்கும் வகையில் தொண்டு நிறுவனத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 155 நபா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதில் லோசான அறிகுறியுள்ள 20 நபா்கள் உதகையில் யூத் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்றால் தினந்தோறும் அதிகமான நபா்கள் பாதிக்கப்பட்டு வருவதால், கோவிட் கோ் சென்டா்கள் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோவைட் தடுப்பூசி உள்ளதால், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவா்களின் வீடுகளுக்கு அருகே உள்ள மருத்துவ மையங்களுக்கு நேரில் சென்று அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல் மீறும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடா்ந்து கடைப்பிடிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...