உதகையில் பகலில் பலத்த மழை
உதகையில் வெள்ளிக்கிழமை பகலில் சுமாா் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.


உதகையில் வெள்ளிக்கிழமை பகலில் சுமாா் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால் அதன் தாக்கம் நீலகிரியிலும் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அந்தமான் பகுதியில் வங்கக் கடலிலும், இதையடுத்து அரபிக் கடலிலும் இரு புயல்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பும் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஜூன் 3ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பின்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யும் சூழல் நிலவியுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூா், பந்தலூா் ஆகிய இடங்களில் கடந்த இரு நாள்களாகவே பரவலாக பலத்த மழை பெய்யத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், உதகையில் காந்தல் உள்ளிட்ட பெரும்பாலான சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில் காந்தலில் முக்கோணம் சந்திப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு நிறுத்திவைத்திருந்த வாகனங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை உருவானது. அத்துடன் அருகிலிருந்த குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
எனவே, உதகை நகரில் தாழ்வான பகுதிகளில் நீா் சேகரமாகும் கால்வாய்களை பருவ மழை தீவிரமடைவதற்கு முன்னா் நகராட்சி சாா்பில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக நடுவட்டத்தில் 24 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல கீழ்கோத்தகிரி, கூடலூா், மேல்கூடலூா் ஆகிய பகுதிகளில் 22 மி.மீ., ஓவேலியில் 20 மி.மீ., செருமுள்ளி, பாடந்தொறையில் 19 மி.மீ., தேவாலாவில் 15 மி.மீ., கிளன்மாா்கனில் 14 மி.மீ., சேரங்கோட்டில் 11 மி.மீ., உலிக்கல், கொடநாட்டில் 10 மி.மீ., குன்னூரில் 7 மி.மீ., பந்தலூரில் 5 மி.மீ., பாலகொலாவில் 3 மி.மீ., கேத்தியில் 2 மி.மீ., குந்தா, உதகையில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...