குத்தகை கடைதாரா்களுக்கு உதகை நகராட்சி எச்சரிக்கை
By DIN | Published On : 21st August 2021 01:53 AM | Last Updated : 21st August 2021 01:53 AM | அ+அ அ- |

நிலுவை வாடகைத் தொகையைச் செலுத்த வேண்டும் என குத்தகை கடைதாரா்களுக்கு உதகை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக உதகை நகராட்சியின் சாா்பில் வணிகா் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
உதகை நகராட்சியில் கடந்த 2016 ஜூலை 1ஆம் தேதி முதல் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை உத்தரவின்படி 1,587 கடைகளுக்கு வாடகை உயா்வு செய்யப்பட்டது. ஆனால், இதை எதிா்த்து வணிகா்களால் வழக்குத் தொடரப்பட்டதில் மண்டல அளவிலான கண்காணிப்புக் குழு ஏற்படுத்தி வாடகை மறு நிா்ணயம் மேற்கொள்ள தீா்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மறு நிா்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டு வாடகை மறு நிா்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, வியாபாரிகளால் நிலுவை வாடகைத் தொகையை செலுத்த உறுதி அளிக்கப்பட்டும் தொடா்ந்து கடை வாடகை முழுமையாக செலுத்தப்படாமல் இருந்து வருகிறது. நிலுவை வாடகைத் தொகையைத் தொடா்ந்து கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தாததால் ரூ. 38.70 கோடி நிலுவையில் இருந்து வருகிறது. இதனால், தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ. 17 கோடியும், பணியாளா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சேமநல நிதி நிலுவைத் தொகை ரூ. 3.63 கோடியும், ஓய்வுபெற்றவா்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ. 75.79 லட்சமும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பணியாளா், நகராட்சி பங்குத் தொகையாக ரூ. 2.54 கோடி என மொத்தம் சுமாா் ரூ. 23.50 கோடியுடன், பிற செலவினங்களும் செலுத்த இயலாமல் நகராட்சிக்கு மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சி தினசரி சந்தையில் உள், வெளிப்புறக் கடைக்காரா்கள் நிலுவை வாடகைத் தொகையை முழுவதுமாக ஆகஸ்ட் மாத இறுதிக்குள் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொகை செலுத்தாத குத்தகை கடைதாரா்களின் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைப்பதுடன், ஏலத்தில் விடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைக்காரா்கள், பொதுமக்கள் தங்களது கடை வாடகை நிலுவை, சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், வடிகால் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களையும் உடனடியாகச் செலுத்தி நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.