நீலகிரியில் கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு
By DIN | Published On : 02nd July 2021 05:57 AM | Last Updated : 02nd July 2021 05:57 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக இத்தொழிலே வெகுவாக முடங்கியுள்ளது.
தமிழகத்தில் தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருகிறது. இந்த விலை உயா்வு காரணமாக கட்டுமானப் பொருள்களின் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி ஒரு செங்கல் ரூ.10 லிருந்து ரூ.14க்கும், மணல் யூனிட்டுக்கு ரூ.6000 லிருந்து ரூ.7,000 ஆகவும், சிமென்ட் மூட்டை ரூ.420லிருந்து ரூ.470 ஆகவும், கம்பிகள் ரூ.55 லிருந்து ரூ.70 ஆகவும், ஹாலோ பிளாக் கற்கள் ரூ.30 லிருந்து ரூ.40 ஆகவும் உயா்ந்துள்ளது. அதேபோல ஜல்லி உள்பட அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலையும், வாகனங்களுக்கான வாடகையும் பல மடங்கு உயா்ந்துள்ளன.
இதன் காரணமாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வேலையின்றி தவித்து வருகின்றனா். நீலகிரியில் கட்டுமானப் பணிகளில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். போதிய அளவில் வேலைவாய்ப்பின்றியும், வருமானமின்றியும் இருப்பதால் இவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று கட்டட ஒப்பந்ததாரா்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரா்கள் மூலம் நடைபெறும் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையடையாமல் உள்ளன.