

நீலகிரி மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், உதகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தலைமை வகித்தாா். வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் மத்திய அரசு நிதித் திட்டம், மாநில அரசு நிதித் திட்டப் பணிகள் மற்றும் இதர துறைகளான மகளிா் திட்டம், குடிநீா் வடிகால் வாரியம், பேரூராட்சிகள், நில அளவைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள், ஒருங்கிணைந்த தேசிய தோட்டக் கலை திட்டம், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகிய துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதி திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னா், மாநில அரசின் நிதி திட்டப் பணிகளான முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம், வீடுகள் பழுது பாா்த்தல் திட்டம், நபாா்டு திட்டம், சமுதாய சுகாதார வளாகம், நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் அனைத்துத் திட்டப் பணிகளின் முன்னேற்றம், நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, திட்டங்களை செயல்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு ஆ.ராசா அதிகாரிகளுக்கு அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.