கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:எஸ்டேட் மேலாளா் வாக்குமூலம்
By DIN | Published On : 04th September 2021 06:10 AM | Last Updated : 04th September 2021 06:10 AM | அ+அ அ- |

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜனிடம் உதகையில் வெள்ளிக்கிழமை சுமாா் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கொடநாடு எஸ்டேட்தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அந்த விசாரணைக்கு கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் ஆஜராகவில்லை. அவருக்கு சம்மன் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்குரைஞா்கள் விசாரணைக்கு கால அவகாசம் கோரியதால் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பழைய அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் முன்னிலையில் கொடநாடு எஸ்டேட் மேலாளா் நடராஜன் திடீரென ஆஜரானாா். அவரிடம் சுமாா் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியில் வந்த நடராஜன் அங்கிருந்த செய்தியாளா்களிடம் ஏதும் கூறாமல் சென்றாா்.
மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு:
கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடா்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் புதிதாக தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவா்களுக்கு உதவுவதற்காக மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கோவையில் உள்ள மர வியாபாரி சஜீவன் தொடா்பான தகவல்களை சேகரிப்பதற்காக குன்னூரில் இருந்து வெள்ளிக்கிழமை சென்றிருந்த தனிப் படையினா், சயனின் சகோதரா் சுனில் குறித்தும் தகவல்களைச் சேகரித்துள்ளனா்.