கொடநாடு வழக்கு: 3-வது நாளாக தீவிர விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமியின் மகனும், தொழிலதிபருமான செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர்  3-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்
Published on
Updated on
1 min read

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமியின் மகனும், தொழிலதிபருமான செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர்  3-வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அவரது உதவியாளா் நாராயணசாமி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரா் சிபி, மற்றொரு சகோதரரான சுனில், ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், குற்றம்சாட்டப்பட்ட ஆறாவது நபரான பிஜின் குட்டியின் சகோதரா் மோசஸ், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கண்ணன் ஆகியோரிடம் காவல் துறையினர் அண்மையில் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், கோவையைச் சோ்ந்த மணல் ஒப்பந்ததாரா் ஆறுமுகசாமி மகனும், தொழிலதிபருமான செந்தில்குமாரிடம் அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை காவல் துறையினர் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

ஆறுமுகசாமி அதிமுக தலைமைக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளாா். மேலும், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருடம் நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், நிறுவனங்கள், விடுதிகளில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் சென்னையில் ஆறுமுகசாமிக்கு சொந்தமான அடுக்குமாடு குடியிருப்பில் கொடநாடு எஸ்டேட் தொடா்பான ஆவணங்கள் சிலவற்றை வருமான வரித் துறையினா் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com