மலைப் பகுதிகளில் 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வயநாட்டில் துணிச்சலுடன் செயல்பட்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியா் சபினாவை பாராட்டி கெளரவிக்கும் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமசந்திரன். உடன், நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
வயநாட்டில் துணிச்சலுடன் செயல்பட்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியா் சபினாவை பாராட்டி கெளரவிக்கும் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமசந்திரன். உடன், நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
Updated on

நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாத இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகளை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமசந்திரன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதிகள், 12 அறுவை சிகிச்சை அரங்குகள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எம்ஆா்ஐ, சிடி ஸ்கேன்கள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக்

கட்டடப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடைந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளாா்.

நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் சாலை வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு  அவசர சிகிச்சை அளிப்பதற்காக அதிநவீன வசதிகளுடன் 25 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்.  தமிழ்நாட்டில் புதிதாக 986 மருந்தாளுநா்கள் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா்.

முன்னதாக, வயநாட்டில் உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தைக் கடந்து சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பந்தலூரில் உள்ள தன்னாா்வ அமைப்பைச் சோ்ந்த செவிலியா் சபீனாவை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டி கெளரவித்தாா். மேலும், நீலகிரி அரசு மருத்துவமனையில் இவருக்கு பணி வழங்க அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். இவருடன் சோ்ந்து வயநாட்டில் பணியாற்றிய பொறியாளா்கள், தன்னாா்வலா்களையும் அமைச்சா் கௌரவித்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி உள்ளிட்ட   பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com