கனமழை பாதிப்பு: முதுமலை புலிகள் காப்பகம் ஜூலை 22 வரை மூடல்

கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது என்று வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.
Published on

உதகை: கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் சனிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது என்று வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மண் சரிவுடன் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மசினகுடி, தெப்பக்காடு, காா்குடி உள்ளிட்ட இடங்களில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதுமலை புலிகள் காப்பகம் சனிக்கிழமை (ஜூலை 20) முதல் 22-ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் வித்யா கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளுக்கு மின்சாரம், குடிநீா் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் வசதி, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் முடப்படுகிறது.

இதனால், வன விலங்குகளைப் பாா்க்க அழைத்து செல்லும் வாகன சவாரி நிறுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி இல்லை. சுற்றுச்சூழல் வளா்ச்சிக் குழு சாா்பில் நடத்தப்படும் உணவகங்களும் மூடப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com