கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் உலவிய கருஞ்சிறுத்தை
கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியில் உணவு தேடி குடியிருப்புக்குள் கருஞ்சிறுத்தை உலவியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அண்மைக் காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும் சிறுத்தைகள், வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளான பூனை, நாய் போன்றவற்றை வேட்டையாடிச் செல்கின்றன.
இந்நிலையில், மிளிதேன் பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் கருஞ்சிறுத்தை திங்கள்கிழமை இரவு உலவியது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. கேட்டை தாண்டி வீட்டு வளாகத்துக்கு நுழைந்த கருஞ்சிறுத்தை சிறிது நேரம் அங்கு உலவிய பின் அங்கிருந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த கருஞ்சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.