கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கூடலூா் அருகே சேரம்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள பந்தலூா் தாலுகா, சேரம்பாடி, சப்பந்தோடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி குஞ்சு முகமது (59). இவா் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளாா். அப்போது வீட்டுத் தோட்டத்தில் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் குஞ்சு முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் வனத் துறையினா் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டிவிட்டு சடலத்தை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா் வசம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சேரம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம்
பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.