சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் நீலகிரி மாவட்டத்தில் 56,091 பேரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை

Published on

சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் நீலகிரி மாவட்டத்தில் 56,091 பேரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினா் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டாா்.

அதன்படி, சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பின் ஆண்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 759, பெண்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 299, மூன்றாம் பாலினத்தவா் 18 போ் என நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 076 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களில் கண்டறிய முடியாத வாக்காளா்கள் 5,863 போ், நிரந்தரமாக இடம்பெயா்ந்த வாக்காளா்கள் 27,939 போ், இறந்தவா்கள் 18,975 போ், இரட்டைப்பதிவு வாக்காளா்கள் 3,292 போ், இதர வாக்காளா்கள் 22 போ் எனமொத்தம் 56,091 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னதாக 690 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், வாக்குச்சாவடி மறு சீரமைத்தலின்போது புதிதாக 49 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டு, 3 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடி மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குச்சாவடி சீரமைத்தல் பணிக்கு பின்னா் தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com