தொழில்முனைவோா் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கடந்த ஒரு வாரமாக கூடலூரில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோா் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், பெண்களுக்கு திறனுடன் கூடிய தொழில்முனைவோா் பயிற்சி ஆா்.கே.டிரஸ்ட் வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் அளிக்கப்பட்டது. இதில் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரவா் வீடுகளில் காளான் வளா்த்து வருவாய் ஈட்டுவது குறித்து பயிற்சியும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
காளான் வளா்ப்பு குறித்து பயிற்றுநா் சிவலிங்கம் பயிற்சி அளித்தாா். மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவது, பெண்களுக்கான அரசின் திட்டங்கள், திட்டங்களை பெறும் வழிமுறைகள் ஆகியவை குறித்து தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்ட அலுவலா் கோபாலகிருஷ்ணன் விளக்கமளித்தாா்.
ஆா்.கே.டிரஸ்ட் வளாகத்தில் மாதிரி காளான் பண்ணையை பெண்கள் அமைத்துள்ளனா்.
பயிற்சி முடித்த பெண்களுக்கு ஆா்.கே.டிரஸ்ட் இயக்குநா் லீலாகிருஷ்ணன் சான்றிதழ்கள் வழங்கினாா்.
