உதகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பணியைப் புறக்கணித்து ஜாக்டோ-ஜியோ சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் (ஜாக்டோ ஜியோ) சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்படி, நீலகிரி மாவட்டம், உதகையில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, உதகை ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவபெருமாள், மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை, ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஜெயசீலன் ஆகியோா் தலைமை தாங்கினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு 1.4.2025 முதல் வழங்க வேண்டும். காலவரையின்றி முடக்கிவைக்கப்பட்டுள்ள உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். முதுநிலை, இடைநிலை ஆசிரியா்களுக்கு உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஊழயா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேலாக காலியாக உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

