ஓவேலி பகுதியைச் சோ்ந்த மறுகுடியமா்வு திட்டப் பயனாளிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆத்தூா் கிராமத்தில் உள்ளவா்களுக்கு ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் கிராமத்தில் மாற்றிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுகுடியமா்வு திட்டத்தின் கீழ் சிலருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோருக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. வீடுகள் ஒதுக்கப்பட்டவா்களுக்கும் பயனாளிகள் கேட்ட மூன்று சென்ட் நிலத்துக்கு மாற்றாக ஒன்றரை சென்ட் நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குறைகளை களைந்து முழுமைபடுத்தி அனைவருக்கும் வீடுகள் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்டடனா். இதையடுத்து, கோட்டாட்சியா் குணசேகரன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.









