பத்திரப் பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருப்பு: பொதுமக்கள் வேதனை
திருப்பூர், தொட்டியபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழக அரசானது இணைய வழியில் பத்திர நகல் பதிவு செய்யும் நடைமுறையை கடந்த வாரம் அறிவித்தது. அரசு உத்தரவைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவை இணைய முறையில்தான் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தால், குளறுபடிகள் அதிகம் இருப்பதாக ஏற்கெனவே புகார் எழுந்தது. மேலும், இணைய முறைக்குத் தேவையான இணைய இணைப்புகள் சரிவர மேற்கொள்ளப்படாததால், பத்திரப் பதிவை மேற்கொள்ள அதிக தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் பத்திர எழுத்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தொட்டியபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இணையப் பிரச்னை காரணமாக, புதன்கிழமை காலை பத்திரப் பதிவு செய்வதற்குச் சென்ற மக்கள் மாலை வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தொட்டியபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றபோது ஏமாற்றம் அடைந்த திருப்பூர், தாராபுரம் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி கூறியதாவது:
இணைய முறையில் பதிவு செய்வது நல்ல திட்டம் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு கால தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது? கடந்த 13-ஆம் தேதியிட்ட எங்களது பத்திரத்தின் பதிவு, இணைய பிரச்னை காரணமாக, 21-ஆம் தேதி வரை முடியவில்லை.
பத்திரப் பதிவுக்காக தொடர்ந்து அலைந்து வருகிறோம். ஒருவழியாக புதன்கிழமை காலை 11 மணிக்கு பத்திரப் பதிவுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் இணைய பிரச்னை என்று கூறி, மாலை 5 மணிக்கே எங்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது. எங்களுக்குப் பின்னால் காத்திருந்தவர்கள் நிலை இன்னும் மோசம்.
இணைய முறையில் பதிவு செய்ய 10 நிமிடத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பழைய முறையில் பதிவு செய்ய வேண்டும். அரசு இதில் உரிய கவனம் செலுத்தி, மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
