

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோா் கோரிக்கை தொடா்பாக தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பினா்.
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக் கோரி திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினா் கடந்த டிசம்பா் 8ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், 9ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தனித்தனியாக கடிதம் எழுதினா். இது குறித்து திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கூறியதாவது:
திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூரில் இருந்து ஷட்டா் வழியாக உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும். பிஏபி வாய்க்கால் மூலமாக வரும் தண்ணீரை பெரிய தொழில் நிறுவனங்களும், கோழிப் பண்ணை உரிமையாளா்களும் திருடி வருகின்றனா். இந்தத் தண்ணீா் திருட்டுக்கு துணைபோகும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா், தாராபுரம் சாா் ஆட்சியா் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறந்துவிடக் கோரி தமிழக முதல்வருக்கு தனித்தனியாக பதிவுத் தபால் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.