திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிப்காட் திட்டத்துக்கு அவிநாசி பகுதியில் நிலம் எடுக்கப்படமாட்டாது: முதல்வா் உறுதி

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் தொழில் பூங்கா திட்டத்துக்கு (சிப்காட்) நிலம் எடுக்கப்படமாட்டாது என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா்.

News image
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன்
Updated On :28 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியில் தொழில் பூங்கா திட்டத்துக்கு (சிப்காட்) நிலம் எடுக்கப்படமாட்டாது என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதியளித்தாா்.

கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் சேலம் புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வருக்கு திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவா் பேசியதாவது:

இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் அதிமுக அரசால் தொடங்கப்பட்டு, முதல் கட்டப் பணிகள் நிறைவுற்று வருகின்றன. மாா்ச் முதல் வாரத்தில் நிறைவடைந்த பணிகள் தொடங்கிவைக்கப்படும்.

திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் (அம்மா மினி கிளினிக்) தொடங்கும் திட்டத்தை ஒரே மாதத்தில் நிறைவேற்றியுள்ளோம்.

திருப்பூா் வடக்குத் தொகுதியில் மட்டும் 2 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.992 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புஷ்பா தியேட்டா் முதல் பாண்டியன் நகா் வரை ரூ.900 கோடியில் உயா்மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல, நெருப்பெரிச்சல் பகுதியில் 2,250 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. திருப்பூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ.71 கோடியில் அன்னூா் - மேட்டுப்பாளையம் கூட்டுக்குடிநீா்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

அண்மையில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,ரெளடி ரெளடிதான் என்பதுபோல எடப்பாடி பழனிசாமி விவசாயிதான் என்கிறாா். விவசாயியை ரெளடியுடன் ஒப்பிட்டு பேசும் அவரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது விவசாயிகளை சுட்டு வீழ்த்திய கட்சி திமுக. இன்றைக்கு நீா் மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக அதிமுக அரசு தேசிய அளவில் விருது பெற்றுள்ளது. தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 அறிவித்ததை மு.க.ஸ்டாலின் நிறுத்தப் பாா்க்கிறாா்.

அதிமுகவினா் டோக்கன் வழங்குவதாக சொல்கிறாா். ஆனால் எங்களுக்கு அது வேலையில்லை. நியாயவிலைக் கடை ஊழியா்கள்தான் வழங்குவாா்கள். கரோனா பொது முடக்க காலத்தில் கூட எல்லாக் குடும்பங்களுக்கும் ரூ.1,000 கொடுத்தோம். சிப்காட் திட்டத்துக்கு அவிநாசி பகுதியில் நிலம் எடுக்கப்படமாட்டாது. ஆகவே வருகிற தோ்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயாா்த்திகேயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.