தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் 

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் தமிழகத்திற்கு மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

News image
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
Updated On :6 நவம்பர் 2020, 2:46 pm

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வருவதால் தமிழகத்திற்கு மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கரோனா தடுப்புப்பணி தொடர்பான ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் 5,592 பயனாளிகளுக்கு ரூ.66.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Story image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பண்ணைக்கிணறு கிராமத்தில் ரூ.82.13 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மாநகராட்சிக்கு உள்பட்ட முருகம்பாளையம் பகுதியில் ரூ.2.5 கோடியில் 4 ஆவது மண்டல அலுவலகம் கட்டுதல், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.2.83 கோடி மதிப்பிலான பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.287 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதே போல், திருப்பூர் மாவட்டத்தில் ரூ.31 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் தொடக்கி வைத்தார். இந்தக்கூட்டத்தில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் ஏ.நடராஜன், உ.தனியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர், திருப்பூர் மாவட்டம் தொழில் வளம் மிக்க மாவட்டம், அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் மாவட்டம். இந்த மாவட்டத்தில் பின்னலாடைத் தொழில், பனியன் உற்பத்தி ஆலைகள் அதிகமாக உள்ளன. இந்த ஆலைகளில் பணிபுரிபவர்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். கரோனா நோய்த் தொற்றுப் பரவல் ஏற்பட்டபோது, இங்குள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை வைத்ததை ஏற்று, அவர்களை பத்திரமாக ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைத்தோம். இந்நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருவதால், அவர்கள் மீண்டும் தமிழகத்திற்கு வந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களை அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட காலத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்குத் தங்கும் வசதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களையும் நன்கு பாதுகாத்தோம். அவர்கள் தங்குவதற்குத் தேவையான இடத்தை நானே தேர்வு செய்து, அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகள், மருத்துவ வசதி அனைத்தும் செய்து கொடுத்தோம். மாண்புமிகு அம்மாவின் அரசைப் பொறுத்தவரை தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களின் நலன் இந்நோய்த் தொற்றுப் பரவல் காலத்தில் பாதுகாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று, திருப்பூரில் ரூபாய் 336.96 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று அறிவித்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Story image

இம்மாவட்டத்தில் வேளாண் பெருமக்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால், கால்நடைச் செல்வங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. அந்தக் கால்நடைச் செல்வங்களுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவக் கல்லூரி தேவை என்ற கோரிக்கையை ஏற்று, வாயில்லா ஜீவன்கனையும் காக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, மாண்புமிகு அம்மாவின் அரசு அதனையும் அமைத்துத் தந்திருக்கிறது. அதற்காக உடுமலைப்பேட்டை தொகுதியில் பண்ணைக் கிணறு கிராமத்தில் சுமார் ரூபாய் 85 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது, விரைவாக அங்கேயும் கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன். மேலும், இந்த மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அம்மா இருக்கின்றபொழுதே நிறைவேற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். அம்மாவால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் அம்மாவின் அரசால் சுமார் 1,652 கோடி மதிப்பீட்டில் அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் வறட்சிப் பகுதியாக இருக்கின்ற திருப்பூர் மாவட்டம் செழுமையான பகுதியாக மாறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாநகராட்சியை சீர்மிகு நகரமாக உருவாக்குவதற்கு சுமார் ரூபாய் 948 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியோடு இத்திட்டத்தை
செயல்படுத்தவிருக்கின்றோம். இந்தத் திட்டத்தில் புதிய பேருந்து நிலையம், வாகனங்களை நிறுத்துவதற்காக வசதியையும் உருவாக்க உள்ளோம். அதோடு, ஊடிnஎநவேiடியேட ஊநவேசந உருவாக்க இருக்கின்றோம். அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யக்கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இன்றையதினம் மூன்று பூங்காக்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, திருப்பூர் மாநகரம் பொலிவூட்டப்பட்டிருக்கின்றது. இப்படி திருப்பூர் மாநகரம் சீர்மிகு நகரமாக உருவாவதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவடைகின்றபொழுது, இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, திருப்பூர் மாநகராட்சியுடன் கூடுதலாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ரூபாய் 258 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினால் மேற்கொள்ளப்பட்டு, தற்சமயம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அம்ருத் திட்டத்தின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூபாய் 1,120 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆகவே, திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிலையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அம்மாவின் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

காங்கேயம் என்று சொன்னால் காங்கேயம் காளைக்கு பெயர்போனது. அதன் நினைவாக, அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயத்தில் காளை உருவச்சிலை ஒன்று அமைக்கவேண்டுமென்று வைத்த கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக, காங்கேயம் நகரத்தில் காவல்நிலையம் ரவுண்டானா அருகில் காங்கேயம் காளை உருவச் சிலை ஒன்று அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடுமலைப்பேட்டை நகரம் நூற்றாண்டு கால சரித்திரம் படைத்திருக்கின்றது. உடுமலைப்பேட்டைக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சாலை வசதி, பாதாளச் சாக்கடை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், குளங்கள், அங்கன்வாடி மையங்கள், நகராட்சி சேவை மையங்கள் போன்றவற்றை மேம்படுத்திட அம்மாவின் அரசு சிறப்பு நிதியாக ரூபாய் 50 கோடி வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படி பல்வேறு திட்டங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மாவட்டம் ஒரு தொழில்வளம் மிக்க மாவட்டம், வேளாண் பெருமக்கள் நிறைந்த மாவட்டம். இரண்டும் ஒன்றாக இணைந்த ஒரே மாவட்டம் திருப்பூர் மாவட்டம். இரண்டையும் மாண்புமிகு அம்மாவின் அரசு இரண்டு கண்களைப் போல பாதுகாத்து, இந்த இரண்டு வளங்களும் சிறப்பாக நடைபெற, அம்மாவின் அரசு துணை நிற்கும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.