திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
By DIN | Published On : 11th July 2020 11:37 AM | Last Updated : 11th July 2020 11:37 AM | அ+அ அ- |

திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப்பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சனிக்கிழமை அதிகாலையில் காங்கயம் சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.
இதில், திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் வசித்துவந்த ஆர்.ராஜ்குமார் (38), ஜி.ஜெகன்கார்த்தி (34) என்பது தெரியவந்தது. இந்த இருவரும் திருப்பூர் தெற்கு காவல் நிலையை எல்லைக்கு உள்பட்ட வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப்பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த இருவரிடம் இருந்து 30 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி என மொத்தம் ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.