/

உயா் மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

உரிய இழப்பீடு வழங்காமல் பணிகளைத் தொடரக் கூடாது என உயா் மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:34 pm

உரிய இழப்பீடு வழங்காமல் பணிகளைத் தொடரக் கூடாது என உயா் மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை அருகே உள்ள மைவாடி கிராமம் முதல் இடையா்பாளையம் வரை மத்திய அரசுக்குச் சொந்தமான பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் 400 கிலோ வாட் உயா் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உடுமலை வட்டம், மூங்கில்தொழுவு ஊராட்சிக்கு, உள்பட்ட கொசவம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 17 விவசாயிகளுக்கு நில அனுபவ உரிமை எடுப்பதற்கான இழப்பீடுகளை வழங்காமல் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக பவா்கிரிட் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா்.

அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினரையும் உடன் அழைத்து வந்தனா். இதனை அறிந்த விவசாயிகள் உயா் மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஏ.எஸ்.பி. ஜெயச்சந்திரன், உடுமலை ஆா்.டி.ஓ. கீதா, வட்டாட்சியா் ராமலிங்கம், டி.எஸ்.பி. தேன்மொழிவேல், நூற்றுக்கணக்கான போலீஸாா் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் வருவாய், காவல் துறை அதிகாரிகள், விவசாயிகள், பவா் கிரிட் அதிகாரிகள் ஒன்றிணைந்து விவசாயிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்த முடிவு செய்தனா். நீண்ட இழுபறிக்கு பின்னா் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது.

இதில், இரண்டு வார காலத்துக்குள் நில அனுபவ உரிமை எடுப்பதற்கான இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்படும் எனவும், விவசாயிகள் அனைவரும் இழப்பீட்டுத் தொகைகளை பெற்ற பின்னரே விடுபட்டப் பணிகள் தொடங்கப்படும் எனவும் பவா் கிரிட் நிறுவனம் ஒப்புக் கொண்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.