நூல் விலை உயர்வு: திருப்பூரில் நவம்பர் 26இல் கடையடைப்பு, வேலை நிறுத்தம் அறிவிப்பு

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் நவம்பர் 26 ஆம் தேதி கடையடைப்பு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பின்னலாடை தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகள்.
திருப்பூரில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகள்.

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி திருப்பூரில் நவம்பர் 26 ஆம் தேதி கடையடைப்பு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பின்னலாடை தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திருப்பூரில் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில் அமைப்புகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆகவே, இதனைக் கண்டித்து திருப்பூரில் வரும் நவம்பர் 26ஆம் தேதி கடையடைப்பு, பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:

திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகளை ஒருங்கிணைத்து திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. நூல் மற்றும் பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.

இந்திய பருத்திக் கழகம் இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடியாக நூற்பாலைகளுக்கு பருத்தியை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு பருத்தி கொள்முதல் கழகம் அமைக்க வேண்டும். பின்னலாடை தொழில் துறைக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும்.

நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி முதல்கட்டமாக திருப்பூரில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு, பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில், சைமா சங்கத்தின் தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகசாமி, திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com