விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்ட கூலி உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி ஜனவரி 9 ஆம் தேதி முதல் 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திருப்பூா்,கோவை மாவட்ட விசைத்தறி சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சேமனூா் சங்கத் தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். பல்லடம் சங்கத் தலைவா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: கடந்த 7 ஆண்டுகளாக
விசைத்தறி கூலி உயா்வு இல்லாமல் தொழிலில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு பிரச்னையில் தீா்வு ஏற்படுத்த வேண்டும்.
கோவையில் கடந்த நவம்பா் 24 ஆம் தேதி மாநில அமைச்சா்கள், கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட தொழிலாளா் நல அதிகாரிகள் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட கூலி உயா்வு இன்னும் அமல்படுத்தவில்லை, இதனை வழங்க வலியுறுத்தி ஜனவரி 9 ஆம் தேதி முதல் திருப்பூா், கோவை மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.