சேவூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 18th February 2021 05:19 PM | Last Updated : 18th February 2021 05:19 PM | அ+அ அ- |

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட 5 வது வார்டு குமாரபாளையம், தண்டுக்காரன்பாளையம்
ஆதிதிராவிடர் காலனிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் ஆழ்துளை கிணற்று நீர் வற்றியதால், ஆற்றுக்குடிநீர் மட்டும் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் கடந்த 10 நாள்களாக இரு நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த ஆற்று குடிநீரும் நிறுத்தப்பட்டது. இதனால் தொடர்ந்து சிரமத்திற்குள்ளான பொதுமக்கள், ஆத்திரமடைந்து தண்டுக்காரன்பாளையம் அவிநாசி புளியம்பட்டி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அரிஹரன், சேவூர் போலீஸார் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் ஆற்றுக்குடிநீர் தடைபட்டுள்ளது.
விரைவில் புதிதாக ஆள்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதுவரை 6 வது வார்டு பகுதியிலிருந்து முறையான குடிநீர் வி நியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.