திருப்பூரில் சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 2 பேர் பலி
By DIN | Published On : 14th November 2021 06:52 PM | Last Updated : 14th November 2021 06:53 PM | அ+அ அ- |

சாய ஆலை கழிவு நீர் தொட்டி.
திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் மேலாளர் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாயை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இரு கழிவுநீர் தொட்டிகள உள்ளது. இந்த நிலையில், சாய ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை அங்கு வேலை செய்து வரும் வடிவேல், நாகராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்துள்ளனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் வடிவேலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக நிறுவனத்தின் மேலாளர் தினேஷ்பாண்டி, எலக்ட்ரீஷியன் ராஜேந்திரன் ஆகியோர் சென்றுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் தினேஷ்பாண்டி, நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் மயங்கி விழுந்துள்ளனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வடிவேலு(32), தினேஷ்பாண்டி (28) ஆகியோர் ஏற்கெனவே இறந்ததாகத் தெரிவித்தனர்.
மேலும், ராஜேந்திரன், நாராஜ் ஆகியோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான தனலட்சுமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இறந்தவர்களின் உறவினர்களும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தினேஷ்பாண்டி இதே நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகள் மேலாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.