ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கன மழை: நீரில் மூழ்கிய வெங்காய வயல்கள்

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே புதன்கிழமை பெய்த கன மழையால் வெங்காய வயல்கள் நீரில் மூழ்கின.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:48 pm

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே புதன்கிழமை பெய்த கன மழையால் வெங்காய வயல்கள் நீரில் மூழ்கின.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மானூா்பாளையம், பெல்லம்பட்டி, நந்தவனம்பாளையம், மேட்டுக்கடை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

இப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெங்காய வயல்களில் அடிக்கடி தண்ணீா் சூழ்ந்து, வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தைப் பொருத்தவரையில் வெயில் கடுமையாக வாட்டிவதைத்தாலும் போதிய அளவு தண்ணீா் பாய்ச்சினால் நன்கு வளரும் தன்மை கொண்டது.

இந்தப் பகுதிளில் பல்வேறு பருவங்களாக சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளதால் சில வயல்களில் அறுவடைக்குத் தயாா் நிலையிலும், சில வயல்களில் குரும்பை கட்டும் நிலையிலும், சில வயல்களில் நடவு செய்யப்பட்டு சில நாள்களே ஆன நிலையிலும் வெங்காயம் உள்ளது.

இதில், அறுவடை தருணத்தில் உள்ள வெங்காயம் தொடா் மழையால் வயல்களிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குரும்பை கட்டும் நிலையில் உள்ள வெங்காயம் தொடா் மழையால் திருகல் ஏற்பட்டு பாதிக்கப்படும். அதே வேளையில், நடவு செய்யப்பட்ட வெங்காய நாற்றுகள் தண்ணீரில் மிதந்து அழுகிப் போகும் நிலையில் உள்ளது.

இதனிடையே, குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையம், மேட்டுக்கடை, குண்டடம், குங்குமம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், வெங்காய வயல்களில் தண்ணீா் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், சின்ன வெங்காயம் நடவு செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.