அதிமுக எந்த ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
By DIN | Published On : 26th June 2022 03:51 PM | Last Updated : 26th June 2022 03:57 PM | அ+அ அ- |

அதிமுக எந்த ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் வசித்தார். இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட சார்பு அணி, பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும், நமது கட்சியினர் அனைவரும் ஒன்று கூடி எடப்பாடியார் அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டு இருக்கிறது. நாலரை ஆண்டுகால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது. பொதுக்குழு நடந்த மண்டபத்தின் முன்பு குறைந்த பட்சம் 50 ஆயிரம் இளைஞர்கள் திரண்டு இருந்ததை நாம் பார்த்தோம்.
இதையும் படிக்க- நமது அம்மா நாளிதழ் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்., தூக்கி எறியப்பட்ட போது ஏற்பட்ட ஆதரவை போல, 1987 இல் ஜெயலலிதா வண்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட போது ஏற்ப்பட்ட எழுச்சியை போல, இன்றைக்கு பொதுக்குழுவில் எடபடியாருக்கு பேரெழுச்சி ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு நின்றதை தமிழகம் கண்டது. தமிழகத்துக்கு நம்பிக்கையான தலைமையாக எடப்பாடி பழனிசாமி கிடைத்து இருக்கிறார்.
இதன் மூலம் வலிமையான தலைமையாக அமர்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவார். ஒட்டு மொத்த மக்களும் தொண்டர்களும் அவர்தான் ஒரே தலைமையாக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நம்பிக்கையை பெற்ற தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிதான். இந்த கட்சி எந்த ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. இஸ்லாமியர்களில் ஒருவரான தமிழ் மகன் உசேன் இந்த கட்சிக்கு அவைத்தலைவர் ஆக இருக்கிறார்.
சாதாரண தொண்டனாக சேலம் மாவட்டத்தின் சிலுவம்பாலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு முதல்வர் பொறுப்பு வரை வந்திருக்கிறார். இந்த கட்சி வாரிசுகளின் கட்சி அல்ல. யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். பொதுக்குழு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர் ஆதரவு இருந்தாலே பொதுக்குழு நடத்தலாம்.
ஏகோபித்த ஆதரவுடன் பொதுக்குழு நடைபெறும். அதில் எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...