விதிகளை மீறி இயங்கும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்!

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் அரசின் விதிகளை மீறி இயங்கி வரும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனிநபர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி சிவசாமி.
 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி சிவசாமி.

காங்கயம் அருகே சிவன்மலை பகுதியில் அரசின் விதிகளை மீறி இயங்கி வரும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தனிநபர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட ராமபட்டினம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சிவசாமி. இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே அரசின் விதிகளை மீறி சட்ட விரோதமாக இயங்கி வரும் 4 கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, குவாரிக்கு அருகே உள்ள இவரது காட்டில் தன்னந்தனியாக ஞாயிற்றுக்கிழமை கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சிவசாமி கூறியதாவது: ராமபட்டினம் ஊரில் உள்ள சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி ஆகிய பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்து வருகின்றனர். இதற்கு அருகிலேயே விதிகளை மீறி 300 மீட்டர் தூரத்திற்குள் குடியிருப்புகள் உள்ள இடத்திலேயே 3 நபர்களுக்குச் சொந்தமான 4 கல்குவாரிகள் மற்றும் 2 கிரசர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட, அதிக ஆழத்தில் கற்கள் விதிமுறைகளை மீறி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மிக அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து கற்களை எடுப்பதால், அருகில் உள்ள வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மேற்கண்டவாறு சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் இந்த கல்குவாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகளுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மனுக்களை நேரில் கொடுத்தும், அஞ்சல் மூலமாக அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எவ்வித தடையும் இன்றி கல்குவாரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எனவே, அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் இந்த கல்குவாரிகளின் உரிமத்தை  நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

இது குறித்து காங்கயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி கூறியபோது, மேற்கண்ட தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அருகில் உள்ள கல்குவாரிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பாக தாராபுரம் சார் ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளார். பின்னர் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார். இந்தப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com