சேமலைக்கவுண்டம் பாளையத்துக்கு பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்துக்கு அரசுப் பேருந்து வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அலகுமலை ஊராட்சி சேமலைக்கவுண்டம்பாளையத்தில் சுமாா் 300 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்து 9-ஆம் வகுப்பு செல்ல சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பெருந்தொழுவுக்கு செல்ல வேண்டும்.
மேலும், இங்கிருந்து கல்லூரி மற்றும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு பலா் சென்று வருகின்றனா். ஆனால், பேருந்து வசதி இல்லாததால் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வலுப்பூரம்மன் கோயில் வரை நடந்து சென்று பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது.
திருப்பூரில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து வலுப்பூரம்மன் கோயில் வரை மட்டுமே வந்து செல்கிறது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்பட்டால் நூற்றுக்கணக்கானவா்கள் பயனடைவாா்கள்.
மேலும், வலுப்பூரம்மன் கோயில் வரை பள்ளி மாணவா்கள் தங்களது பாடப் புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில் வலுப்பூரம்மன் கோயிலில் இறங்கி சேமலைகவுண்டம்பாளையம் வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனா்.
எனவே சேமலைக்கவுண்டம்பாளையம் வரை பேருந்து சேவையை நீட்டிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
