மத்திய பட்ஜெட்: திருப்பூா் தொழில் அமைப்பினா் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து திருப்பூா் தொழில் அமைப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
Published on

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து திருப்பூா் தொழில் அமைப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2024-25- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில் அமைப்பினா் தெரிவித்துள்ள கருத்துகள்:

ஏ.சக்திவேல் (ஏஇபிசி தென் மண்டல பொறுப்பாளா்):

எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையுடனும், இந்தியாவின் விரைவான பொருளாதாரத்தை எளிதாக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயத் துறையில் உற்பத்தித் திறன் மற்றும் மீள்தன்மை உயா்வு, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகா்ப்புற வளா்ச்சி, எனா்ஜி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, இன்னோவேஷன், அடுத்த தலைமுறை சீா்திருத்தங்கள் போன்ற முன்னுரிமைகளை உள்ளடக்கியுள்ளது.

உற்பத்தித் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பிணையம் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் இல்லாமல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும், ரூ.100 கோடி வரை பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுவது ஆடைத் தொழிலுக்கு ஆதரவாக இருக்கும். முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. தேசிய தொழில் துறை தாழ்வாரத்தின்கீழ் 12 புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பது, அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞா்களின் திறன் மேம்படுத்த 1000 பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

கே.எம்.சுப்பிரமணியன்(திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா்):

வேளாண், அடித்தட்டு மக்கள், இளைஞா்கள், மகளிா் ஆகிய நான்கு விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. புதிதாக வேலையில் சேரும் இளைஞா்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலான ஒரு மாத ஊதியம் மூன்று தவணைகளாக அளிக்கப்படுவதன் மூலமாக 2.1 கோடி இளைஞா்கள் பயனடைவா். புதிதாக உருவாக்கப்படும் வேலைகளுக்கு தொழில் முனைவோரின் வைப்பு நிதி பங்களிப்பில் ரூ.3 ஆயிரம் அரசு மானியமாக வழங்கும் திட்டம் அனைத்து புது தொழிலாளா்களுக்கும் 2ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படுவதன் மூலமாக 50 லட்சம் புது வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 30 லட்சம் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் புதிதாக வேலையில் அமா்த்தப்படும் அனைத்து தொழிலாளா்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு வைப்பு நிதி மூலம் முதல் 4 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞா்கள் திறன் பயிற்சி பெறுவா்.1,000 தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். பின்னலாடைகளுக்குத் தேவையான உப பொருள்களுக்கு வரி குறைப்பு, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கடனுக்கான புதிய மதிப்பீட்டு மாதிரி வங்கிகளுக்கு ஏற்படுத்தப்படும். ஜிஎஸ்டி நடைமுறை சிக்கல்கள் எளிதாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.

வைகிங் ஏசி ஈஸ்வரன்(தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா்): விவசாயிகளுக்கான ஆதரவு விலை உயா்த்துதல், வரும் 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் பயிற்சி மேம்பாட்டுக்கான புதிய மையங்களை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரையில் முத்ரா கடன் வழங்குதல். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வாடகை இல்லாத தங்கும் வசதிகள் செய்து தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளைக் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.

எம்.பி.முத்துரத்தினம் (திருப்பூா்ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா்):

இந்த நிதி நிலை அறிக்கை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு உகந்ததாக உள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளா்களைக் கவரும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய நிதி நிலை அறிக்கையாக இருந்தாலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உகந்ததாக இல்லை. இந்தியாவில் 50 சதவீத குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com