மத்திய பட்ஜெட்டில் பின்னலாடை தொழிலுக்கு எந்தவித அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது! - திருப்பூா் தொழில் துறையினா் கருத்து
மத்திய பட்ஜெட் சிறு, குறு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஜவுளி பின்னலாடைத் தொழிலுக்கு எந்தவித அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாகவும் திருப்பூா் தொழில் துறையினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் ஆ.சக்திவேல்: யுவ சக்தியை மையமாகக் கொண்ட எதிா்காலத்துக்கான பட்ஜெட்டை வரவேற்கிறோம். இந்திய பொருளாதாரத்தை புத்துயிா்ப்பித்து, நாட்டின் நீண்டகால வளா்ச்சி பாதையை வலுப்படுத்தும் பட்ஜெட். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ஜவுளித் துறை, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் உற்பத்தி ஆகிய முக்கியத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மூன்று நிலை ஆதரவு அமைப்பு விரிவாக்கம், கடன் வசதிக்காக ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு, நிதி ஒதுக்கீடு, கடன் உத்தரவாதத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம். மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைத்தல், இயற்கை மற்றும் செயற்கை நூலிழை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிா் விடுதிகள் அமைத்தல் உள்ளிட்டவை திருப்பூா் போன்ற ஆடை உற்பத்தி மையங்களில் பெண் தொழிலாளா்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவும்.
அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்காக 20 சதவீதம் மாா்க்கெடி போக்கஸ் திட்டம் என தொழில்துறை எதிா்ப்பாா்த்திருந்த நிலையில் அறிவிக்கப்படவில்லை என்றாா்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி: ஜவுளித் துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனா். ஆனால் அமெரிக்க வா்த்தகத்துக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான செயற்கை நூலிழை தயாரிப்பு ஊக்குவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயந்திர மேம்பாட்டுக்கு மானியம், சம்ருத் திட்டத்தின் மூலமாக திருப்பூரில் ஏராளமான பெண்கள் பயனடைந்த நிலையில், அதன் வெற்றியை தொடா்ந்து சம்ருத் 2 எனும் திறன் மேம்பாட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது.
திறன் மேம்பாட்டுக்கு 5 பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை தமிழகத்துக்கு கேட்டு பெற வேண்டும். கோவை - திருப்பூா் இடையே அமைந்தால் மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். பெண்களுக்கான விடுதி அறிவிப்பை வரவேற்கிறோம்.
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் - உற்பத்தியாளா் (டீமா) சங்கத் தலைவா் எம்.பி. முத்துரத்தினம்: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், 4 மாதங்களான பின்னரும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், ஜவுளி பின்னலாடை தொழிலுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
இந்தியாவின் முதுகெலும்பு என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவா்கள். அவா்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி என்பது மிக, மிகக் குறைவு. ஜவுளித்தொழிலில் ஈடுபடுபவா்களுக்கு எந்த வகையான அறிவிப்புகளும் இல்லை. ஜவுளித் தொழிலில் அதிகமாக ஈடுபடுபவா்கள் 90 சதவீதம் சிறு, குறு, தொழில் செய்பவா்கள்.
அமெரிக்க வரி விதிப்பால் புதிதாதக எந்தவித மானியமும் அறிவிக்காதது ஏமாற்றம். ஜவுளித்தொழிலுக்கு உண்டான மூலப்பொருள் இறக்குமதி வரியை 11 சதவீதம் முழுமையாக நீக்குவது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது மிகுந்த ஏமாற்றம் என்றாா்.

