குன்னத்தூா் பேரூராட்சியில் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்

குன்னத்தூா் பேரூராட்சியில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீட்டு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்று மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் குன்னத்தூா் கிளைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ராஜ்பரத் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விபரம்: குன்னத்தூா் பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 2-ஆவது கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும் விண்ணப்பித்த பொது மக்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் குடிநீா் இணைப்புகள் வழங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, குன்னத்தூா் பேரூராட்சியில் வீட்டு குடிநீா் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். அதேபோல, ஊத்துக்குளி பேரூராட்சியிலும் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், திருப்பூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாா், ஊத்துக்குளி வட்டார செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com