திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து சாலையில் வசித்து வருபவர் தெய்வசிகாமணி(78), மனைவி அலமேலு(75), தம்பதியினர். இவரது மகன் செந்தில்குமார்(46) அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் கோவையில் வசித்து வந்துள்ளார். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மகன் செந்தில்குமார் உறவினர் திருமண நிகழ்விற்காக நேற்று முன்தினம் தந்தை தெய்வசிகாமணி வசிக்கும் தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனிடையே, நேற்று இரவு வீட்டிற்கு வந்த கொள்ளை கும்பல், உள்ளே புகுந்து வீட்டிலிருந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசிபாளையம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் வசித்த தோட்டத்தில் விவசாய பணிக்காக வேலைக்கு சேர்த்தவர் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வருவதால் அவரை கடந்த 20 நாள்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
அதில் ஆத்திரம் அடைந்தவர் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றிருக்க கூடும் என்கிற அடிப்படையில் அந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அவிநாசிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல்துறையினர் ஐந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.