சிறுத்தை உலவுவதாக வதந்தி: வனத் துறை எச்சரிக்கை

பல்லடத்தில் சிறுத்தை உலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை எச்சரித்துள்ளது.
Published on

பல்லடத்தில் சிறுத்தை உலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை எச்சரித்துள்ளது.

பல்லடத்தை அடுத்த கரடிவாவி பகுதியில் சிறுத்தை உலவுவதாக வனத் துறையினருக்கு அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் அங்கு படிந்திருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனா். அப்போது, அது நாய் மற்றும் மான்களின் கால் தடம் என்பதும், சிறுத்தை உலவியதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அதே பகுதியில் தொடா்ந்து சிறுத்தை உலவுவதாக சமூக வலைதளங்களில் சிலா் தகவல் பரப்பி வருகின்றனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: பல்லடம் தாலுகாவுக்குள்பட்ட பள்ளபாளையம், பரமசிவம்பாளையம், வேலாயுதம்பாளையம், அக்ரஹாரப்புத்துாா், வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை உலவுவதாக சமூக வலைதலங்களில் தகவல் மற்றும் புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன. அந்தப் படங்கள் அனைத்தும் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டவை என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை. பொதுமக்களிடையை பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிலா் இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டு வருகின்றனா்.

எனவே, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோா் கண்காணிக்கப்பட்டு அவா்கள் மீது வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com