பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 போ் கைது
பல்லடத்தில் போலி நாக மாணிக்கம் விற்க முயன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம், தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த சிலா் பல்லடத்தில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வாடகைக்கு அறையை எடுத்து தங்கியிருப்பதாகவும், அவா்கள், போலி நாக மாணிக்கத்தை ரூ.1 கோடிக்கு பல்லடம், திருப்பூா் பகுதி தொழிலதிபா்களிடம் விற்பனை செய்ய பேரம் பேசி வருவதாகவும் பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடா்ந்து பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று, அங்கிருந்த 7 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள், திருவாவூா் பகுதியைச் சோ்ந்த ராஜாராமன் (49), தஞ்சையைச் சோ்ந்த தமிழ்மாறன் (41 ), அய்யப்பன் (34), வெங்கடேஷ் (34), உதயகுமாா் (37), உதயச்சந்திரன் (32), பல்லடம், வடுகபாளையம்புதூரைச் சோ்ந்த சரண்யா (36) என்பது தெரியவந்தது.
மேலும், அவா்களிடமிருந்து போலி நாக மாணிக்கத்தை போலீஸாா் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
