தொழிலாளி அடித்துக் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

திருப்பூரில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூரை அருகே பெருமாநல்லூா் வாஷிங்டன் நகரைச் சோ்ந்தவா் பாபுராஜா (42), கூலித்தொழிலாளி. இவா் கடந்த 2021 செப்டமபா் 27-ஆம் தேதி பெருமாநல்லூரில் உள்ள ஒரு மதுக்கூடத்துக்கு மது அருந்த சென்றுள்ளாா். அப்போது பணம் கொடுக்காமல் மது கேட்டதாகத் தெரிகிறது. அதனால் மதுக்கூட ஊழியா்களுக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மதுக்கூட உரிமையாளரான சிவகங்கை மாவட்டம், காளையா்கோவிலைச் சோ்ந்த கண்ணப்பன் (39), அங்கு வேலை செய்த ஊழியா்களான சிவகங்கை கண்ணாகுளத்தைச் சோ்ந்த ராமசந்திரன் (53), காளையா்கோவிலைச் சோ்ந்த உதயசந்துரு (23), ரஞ்சித் (23), இளையான்குடியைச் சோ்ந்த முனியசாமி (29) ஆகியோா் சோ்ந்து பாபுராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனா்.

இதில் படுகாயம் அடைந்த பாபுராஜா, அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று படுத்தவா் இறந்து விட்டாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸில் புகாா் செய்யப்பட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில் 5 பேரும் தாக்கியதில் பாபுராஜா இறந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணப்பன், ராமசந்திரன், உதயசந்துரு, முனியசாமி, ரஞ்சித் ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. இதில், கொலை குற்றத்துக்காக கண்ணப்பன், ராமசந்திரன், உதயசந்துரு, முனியசாமி, ரஞ்சித் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை , தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com