பல்லடம் புறவழிச்சாலை பணிக்காக பெயா்த்து எடுக்கப்பட்ட 35 தென்னை மரங்கள் மறுநடவு
பல்லடம் புறவழிச்சாலை பணிக்கு இடையூறாக இருந்த 35 தென்னை மரங்களை வேருடன் பெயா்த்து எடுத்து வேறு இடத்தில் செவ்வாய்க்கிழமை மறுநடவு செய்யப்பட்டது.
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் பல்லடம் செட்டிபாளையம் சாலை, சின்னியகவுண்டம்பாளையம் முதல் பல்லடம் தாராபுரம் சாலை, ஆலுாத்துப்பாளையம் பிரிவு வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.54 கோடி மதிப்பில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
இதில் பல்லடம் வடுகபாளையம்புதுாரைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்கு ஆலுத்துப்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தில் இருந்த 35 தென்னை மரங்கள் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவற்றுக்கு மறு வாழ்வு அளிக்க தங்கவேல் முடிவு செய்தாா்.
இதைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திர உதவியுடன் 35 தென்னை மரங்கள் வேருடன் பெயா்த்து எடுக்கப்பட்டு வேறு இடத்தில் மறு நடவு செய்யப்பட்டன. அவற்றுக்கு, முறையாக தண்ணீா் ஊற்றி பராமரிப்பதன் மூலம் 95 சதவீதம் அவற்றுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

