
கல்குவாரி சாலைகளில் காற்றுமாசை கட்டுப்படுத்த தானியங்கி தண்ணீா் தெளிப்பான்கள் அமைப்பு

காரணம்பேட்டை- பெருமாகவுண்டன்பாளையம் சாலையில் கிரஷா் துகள்களால் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியாக, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நீா்த்தெளிப்பான்கள்.
பல்லடம் அருகே உள்ள கல்குவாரி, கிரஷா் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மண் துகள்களால் ஏற்படும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதி சாலைகளில் தானியங்கி நீா் தெளிப்பான்கள் (ஸ்பிரிங்லா்) அமைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் வட்டாரத்தில் கோடங்கிபாளையம், சாமளாபுரம், பூமலூா், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் போன்றவை லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு லாரிகளில் ஏற்றிச் செல்லும்போது, அதிலிருந்து வெளியேறும் துகள்கள் சாலையில் பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தி வந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், கிராமப்புற மக்களும் பெரிதும் சிரமப்பட்டு வந்தனா்.
இதற்குத் தீா்வு காண கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் சங்கத்தினா் லாரிகள் மூலம் தண்ணீா் எடுத்து வந்து காற்று மாசை தடுக்கும் வண்ணம் சாலைகளில் தண்ணீா் தெளித்து வந்தனா். தினசரி பலமுறை லாரிகளை இயக்க வேண்டியிருந்ததாலும், சாலையோரம் தேங்கும் துகள்களுக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்காததாலும் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று காற்று மாசு தடுப்பு நிபுணா்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி சாலையோரம் தானியங்கி நீா் தெளிப்பான்கள் (ஸ்பிரிங்லா்) அமைத்துள்ளனா்.
இது குறித்து காரணம்பேட்டை கல்குவாரி,கிரஷா் உரிமையாளா்கள் சங்க தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது:
கோடங்கிபாளையம் ஊராட்சி காரணம்பேட்டை பகுதியில் பெருமாகவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் கல்குவாரிகள் இருக்கும் பகுதியில் சாலையில் ஏற்படும் தூசி படலத்தைக் கட்டுப்படுத்தவும் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் ஸ்பிரிங்லா் முறையில் தண்ணீா் தெளிக்கத் திட்டமிட்டு, ரூ.35 லட்சம் மதிப்பில் இதற்கான கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தினந்தோறும் 40 ஆயிரம் லிட்டா் தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை 2 நிமிஷங்கள் தானாகவே தண்ணீா் தெளிக்கும் வகையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வகையில் இந்த தானியங்கி முறை அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணியை கைப்பேசி மூலம் இயக்கவும், கண்காணிக்கவும் இரண்டு நபா்கள் சங்கத்தின் சாா்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் தற்போது அப்பகுதியில் காற்று மாசு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





