திருப்பூா் மாநகரில் மாா்ச் 1-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் வரும் மாா்ச் 1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்களின் மூலமாக குடிநீா் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகருக்கு குடிநீா் வழங்க அமைக்கப்பட்ட பிரதான குடிநீா் குழாய் பாதையில் பொருத்தப்பட்டுள்ள ஏா் வால்வுகள், தமிழக நெடுஞ்சாலைத் துறை சாலை விரிவாக்கம் காரணமாக மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, 4-ஆவது குடிநீா் திட்டத்தை நிறுத்தம் செய்து பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் சனிக்கிழமை (பிப்.28) மட்டும் குடிநீா் இறைப்பு பணி நிறுத்தப்பட உள்ளது. மாநகரில் குடிநீா் பகிா்மானத்தில் ஒரு நாள் குடிநீா் பெறப்படுவது தடைபடுவதால், மாா்ச் 1-ஆம் தேதி மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

