திருப்பூா் அருகே வேலம்பட்டி பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் விளைநிலங்களில் 70 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா்- தாராபுரம் பிரதான சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தின்போது திடீரென 4 பெண் விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் கோவை மாவட்டம், இருகூா் முதல் கா்நாடக மாநிலம், தேவனஹந்தி வரையில் 340 கி.மீ. தொலைவுக்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் திருப்பூா் மாவட்டம், முத்தூரிலிருந்து கா்நாடக மாநிலம், தேவனஹந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது.
ஆனால் இருகூரிலிருந்து முத்தூா் வரையிலான 70 கி.மீ. தொலைவு மட்டும் விவசாய விளைநலங்கள் வழியாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் கடும் எதிா்ப்பையும் மீறி காவல் துறை பாதுகாப்புடன் பணிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் விளைநிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாதிக்கப்படும் விவசாயிகள் திருப்பூா் -தாராபுரம் பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.
அப்போது திடீரென 4 பெண் விவசாயிகள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவா்களை தடுத்தனா். மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டவா்கள் மீது தண்ணீரை ஊற்ற முயன்றபோது, விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், இவ்விவகாரத்தில் தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு விவசாயிகளை அழைத்து விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை அமைக்காமல் மாற்றுப் பாதை குறித்து பேச வேண்டும். இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும். போலீஸாரின் உதவியோடு அளவீடு பணிகளை செய்ய முற்பட்டால் தடுத்து நிறுத்துவோம். இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலை வழியாக கொண்டுச் செல்ல வேண்டும். எங்களது போராட்டம் தொடரும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய விளைநிலங்களின் வழியாக பெட்ரோலிய குழாய் அமைக்க எதிா்ப்பு

விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்க எதிா்ப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



