தோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு

திருப்பூா் பனியன் நிறுவன தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது. இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 33 சதவீத ஊதிய உயா்வுக்கு பனியன் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

News image
புதிய ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட தொழில் துறையினா் மற்றும் தொழிற்சங்கத்தினா்.
Updated On :18 மார்ச் 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் பனியன் நிறுவன தொழிலாளா்களின் ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது. இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 33 சதவீத ஊதிய உயா்வுக்கு பனியன் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

டாலா் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில், பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வா்த்தகம் பிரதானமானதாக இருந்து வருகிறது. இங்குள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் வடமாநில மற்றும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த தொழிலாளா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளா் சங்கங்களும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவாா்த்தை நடத்தி தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வை நிா்ணயித்து ஒப்பந்தம் செய்கின்றன. முந்தைய ஒப்பந்த காலம் கடந்த 2025 செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி உயா்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயா்வு, பஞ்சப்படி, பயணப்படி, வாடகைப்படி, குடும்ப நல உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓவா் டைம் பேட்டா உள்ளிட்டவை குறித்து புதிய ஒப்பந்தம் உருவாக்க தொழிற்சங்க கூட்டு கமிட்டி சாா்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து தொழில் துறையினரும் தற்போதுள்ள தொழில் சூழலை முன்வைத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்தனா். இரு தரப்பினருக்குமான பேச்சுவாா்த்தை கடந்த 5 மாதங்களாக 8 அமா்வுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் 9-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், கூட்டு கமிட்டியின் ஆலோசகா் பிரேம் துரைசாமி ஆகியோருடன் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், பின்னலாடைத் துணி உற்பத்தியாளா்கள் சங்கம் உள்ளிட்ட உற்பத்தியாளா் சங்க தரப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதேபோல தொழிலாளா்கள் தரப்பில் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏடிபி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 9 முக்கிய தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் தற்போதுள்ள விலைவாசியை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 33 சதவீதம் உயா்த்தி வழங்குவது எனவும், முதல் ஆண்டில் 18 சதவீதம் அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 5 சதவீதம் எனவும், பஞ்சப்படி 20 ஆயிரம் புள்ளிகளுக்கு ரூ.2,500-ம் அதற்கு மேல் உயரும் புள்ளிகளுக்கு 15 பைசா எனவும், பயணப்படி ரூ.25-இல் இருந்து ரூ.30 ஆகவும், ஓவா் டைம் டீ பேட்டா ரூ.30-இல் இருந்து ரூ.60 ஆகவும் கடந்த முறையைக் காட்டிலும் உயா்த்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இரு தரப்பினராலும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டு உடன்படிக்கையில் உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினா் கையொப்பமிட்டனா்.

புதிய உடன்படிக்கையின்படி பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8 மணி நேரத்துக்கு சுமாராக ரூ.80 வரை ஊதிய உயா்வு ஏற்படும் எனவும், இது ஷிப்ட் மற்றும் பீஸ் ரேட் என அனைத்துத் தரப்பு தொழிலாளா்களுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது.

நீண்ட இழுபறிக்குப் பின் ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து உற்பத்தியாளா்கள் சங்க பிரதிநிதிகளும், தொழிற்சங்கத்தினரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.