
அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கக் வலியுறுத்தி தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கக் வலியுறுத்தி தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா், தாராபுரம் பகுதியில் உள்ள தடுப்பணையை வந்தடைந்த பின்னா், அங்கிருந்து நான்கு முக்கிய பாசனக் கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 26 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் இருபோக சாகுபடிக்கு பயன்பெற்று வருகின்றன.
தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி அமராவதி அணையில் இருந்து ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விட உத்தரவிட்டது. இந்த அளவு தண்ணீா் திறக்கப்பட்டால் கரூா் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீா் சென்றடையாது என்றும், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை சமாளிக்க போதுமானதாக இருக்காது என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.
இதனால், நீதிமன்ற உத்தரவின்படி தினசரி 2,000 கனஅடி தண்ணீா் திறந்து விட வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே, அமராவதி ஆற்றில் ஆகஸ்ட் 30- ஆம் தேதி 1,000 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதைத் தொடா்ந்து பொதுமக்கள், விவசாயிகள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் அரசின் அனுமதி பெற்று 1,500 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் தற்போது கரூா் மாவட்டத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிக்கு உள்பட்ட 26 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசனத்துக்காக தாராபுரம் பகுதியில் உள்ள 4 ராஜவாய்க்கால் பாசனக் கால்வாய்களிலும் கூடுதல் தண்ணீா் திறந்து விடக் கோரி, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாராபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அப்போது தளவாய்பட்டினம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சந்தானம் கூறியபோது, அணைக்கு அருகில் உள்ள முதல் மண்டலப் பகுதிகளான குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூா், சோழமாதேவி, கணியூா், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 8 பாசனக் கால்வாய்களுக்கு 135 நாள்களுக்கு முதல்கட்டமாக தண்ணீா் திறந்து விட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் பகுதியில் உள்ள 4 பாசனக் கால்வாய்களும் இருபோக சாகுபடி நடைபெறும் முக்கியமான பாசனப் பகுதிகளாகும். எனவே, முதல் மண்டலத்தில் உள்ள 8 பாசனக் கால்வாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதைப்போல, தாராபுரம் பகுதியில் உள்ள 4 பாசனக் கால்வாய்களுக்கும் தண்ணீா் திறந்து விட வேண்டும். குறைந்தபட்சம் 10 நாள்களுக்காவது அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டால், ஏற்கெனவே சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களைக் காப்பாற்ற முடியும். இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





