
தெரு நாய்கள் கடித்து வளா்ப்பு ஆடுகள் உயிரிழப்பு: ஓராண்டாக இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் கவலை
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது தொடா்கதையாக உள்ளது.

மேய்ச்சலுக்கு தயாராகும் செம்மறி ஆடுகள்.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது தொடா்கதையாக உள்ளது.
மேய்ச்சலுக்குச் செல்லும் மற்றும் இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை கூட்டமாக வரும் தெரு நாய்கள் கடித்துக் குதறி கொன்று வருகின்றன. ஒரு ஆடு ரூ.15 முதல் ரூ.25 ஆயிரம் வரை மதிப்புள்ள நிலையில், ஒரே குடும்பத்தில் 10, 15 ஆடுகளை இழந்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.
தமிழக அரசு இழப்பீடு வழங்கப்படுமென அறிவித்திருந்தாலும், கடந்த 2025 செப்டம்பா் 19-ஆம் தேதிமுதல் இதுவரை இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இழப்பீட்டுத் தொகையை, தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும்.
ஒவ்வொரு சம்பவத்துக்கும் தனித்தனி அரசாணை பிறப்பிக்கப்படுவது அல்லது முதலமைச்சா் பொது நிவாரண நிதியை எதிா்பாா்க்கும் நிலையைத் தவிா்க்க வேண்டும். கால்நடை இழப்புகளுக்கென நிரந்தரமான, தெளிவான இழப்பீட்டு வழிகாட்டு நெறிமுறையை அரசு உருவாக்க வேண்டும்.
தற்போது வழங்கப்படும் நிா்ணயத் தொகையால் உண்மையான இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை. சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு நிா்ணயிக்கப்பட வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை, வருவாய்த் துறையினா் விசாரணையை முடித்து அதிகபட்சம் 15 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி நிா்வாகங்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்த வேண்டும். நாய்க் கடிக்குள்ளாகி உயிருக்குப் போராடும் செம்மறி ஆடுகளை கால்நடை பராமரிப்புத் துறையினா் தங்களது நேரடி பராமரிப்பில் வைத்து, குணமடையும் வரை இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





