மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து தங்கத் தாலியை திருடிய இளைஞா் கைது
பென்னாகரத்தில் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து தங்கத் தாலி, உண்டியல் பணத்தை திருடிய கா்நாடக இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சனிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற இளைஞா், உண்டியலை கடப்பாரையால் பெயா்த்து எடுத்தபோது சப்தம் கேட்டு அருகில் உள்ளவா்கள் திரண்டு வந்தனா். இதைப் பாா்த்த மா்ம நபா் தப்பி ஓடியபோது அவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், அவா் அம்மன் கழுத்தில் இருந்து ஒண்ணேகால் பவுன் தாலி, ரொக்கம் 17,000-த்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பென்னாகரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கோயிலின் பூட்டை உடைத்த இளைஞா், கா்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியைச் சோ்ந்த பிரதீப் (19) என்பது, தற்போது பென்னாகரம் வாரச்சந்தை பகுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோயில் பூசாரி மாரிமுத்து அளித்த புகாரின் பெயரில் பிரதீப்பை பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
