தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன: ராமதாஸ் பாராட்டு!

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒசூரில் பேட்டி
ஒசூர் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாட்டாளி மக்கள் கட்சியினர்.
ஒசூர் வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பாட்டாளி மக்கள் கட்சியினர்.
Published on
Updated on
2 min read

ஒசூர்: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார். ஒசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த ராமதாஸ் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் முதலீடுகள் குவிகின்றன. இதுதான் அனைவரின் விருப்பம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். பாராட்டுக்கள். இது நல்லபடியே நடக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம்.”

”ஒசூர், வேப்பனஹள்ளி, தளி ஆகிய மூன்று தொகுதிகளை இணைத்து ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தமிழக சட்டப்பேரவையில் ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பலமுறை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏக்கள் குழு தலைவர் ஜி.கே மணி பேசியுள்ளார். தற்போது ஒசூரை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒசூரில் பூக்களும், காய்கறிகளும் அதிக அளவில் விவசாயிகளால் பயிரிட்டு வருகின்றனர். இங்கு பூக்களையும் காய்கறிகளையும் விவசாயிகள் சரியான விலைக்கு விற்க முடியவில்லை. எனவே தமிழக அரசு இந்தப் பகுதியில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒசூர் ஒரு மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒசூரில் பாதாள சாக்கடை, சாலை வசதி, குடிநீர் வசதி போதிய அளவில் நிறைவேற்றப்படவில்லை. வடக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். ஒசூரில் விமான நிலையம் அவசியம் தேவை. சேலத்தைப் போலவே ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். பெங்களூரு விமான நிலையம் செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. எனவே ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். தொழிலதிபர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

ஒசூரில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் வெளியூரில் இருந்து ஒசூர் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒசூரில் மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்க வேண்டும்.”

“தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்த்து தொழில் பெருவழிச்சாலை அமைக்க வேண்டும். ஒசூரில் தொழிற்சாலைகள் வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவது உண்மை. 21 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதி அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் வேற எந்த கட்சியும் செய்யாத பணியை பாட்டாளி மக்கள் கட்சி செய்து வருகிறது.”

பாமகவில் அப்பா, மகன் பிரச்சினைக்கு எப்போது தீர்வு ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “செப். 11-ஆம் தேதியே தீர்வு ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, சேலம் எம்எல்ஏ அருள், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் முனிராஜ், முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்ராஜன், மாவட்டச் செயலர் முருகன், மாவட்டத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Summary

TamilNadu sees huge business investments, says PMK leader Ramadoss in Hosur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com