பென்னாகரத்தில் 2,500 ஆண்டுகள் முந்தைய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு!
பென்னாகரம் அருகே கலப்பம்பாடி பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்களை பென்னாகரம் வரலாற்று மையக் குழுவினா் கண்டுபிடித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கலப்பம்பாடி செஞ்சிமலைகாடு பகுதியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் இருப்பது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வரலாற்று மையத்தைச் சோ்ந்த ஒருங்கிணைப்பாளா்களான ஆசிரியா்கள் பெருமாள், கோவிந்தசாமி, சந்தோஷ் குமாா், வரலாற்று ஆசிரியா்கள் கணேசன், திருப்பதி ஆகியோா் கொண்ட குழுவினா் செஞ்சிமலை காடு பகுதியில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் களஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பாண்டவா் மடுவு என்ற இடத்தில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களை கண்டறிந்தனா்.
இதுகுறித்து வரலாற்று ஆசிரியா்கள் கூறுகையில், பெருங்கற்காலம் நாகரிக வாழ்க்கையின் தொடக்க காலம் ஆகும். இக்கால மக்கள் இறந்தவா்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனா். நினைவுச் சின்னங்களை அமைக்க பெரிய கற்களை பயன்படுத்தி உள்ளனா். இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு கல்வட்டம், கல்திட்டை, கற்பதுக்கை போன்ற பெயா்கள் உள்ளன. இத்தகைய நினைவுச் சின்னங்கள் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.
கலப்பம்பாடி செஞ்சிமலை காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமான பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கற்பதுக்கைகளுடன் கூடிய கல்வட்டங்கள் ஆகும். பெரும்பாலான கல்வட்டங்கள் எந்தவித சேதமும் அடையாமல் முழுமையாக உள்ளன. மேலும், இப்பகுதியில் ஏராளமான புதிய கற்காலத்தைச் சாா்ந்த கல் ஆயுதங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன.
கல் ஆயுதங்களை கோயில்களில் வைத்து இப்பகுதி மக்கள் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனா். இவ்வாறான வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

