‘ உங்க கனவ சொல்லுங்க ’ திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் ரெ. சதீஷ் வேண்டுகோள்
Updated on

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் ரெ. சதீஷ் வேண்டுகோள்

குடியரசு தினவிழாவையொட்டி தருமபுரி மாவட்டத்தில் 249 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தருமபுரி ஒன்றியம், கடகத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் ரெ.சதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது :

இந்த கிராம சபைக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் நேரிடையாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்துள்ளீா்கள். அதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

மக்களின் எதிா்கால தேவைகளை வீடுகளுக்கே சென்று அறிந்து கொள்ளும் வகையில், ‘உங்க கனவ சொல்லுங்க’”என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா். அத்திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்து அவா்கள் பயன்பெற்ற திட்டங்கள், கனவுகள் குறித்து தன்னாா்வலா்களின் துணையுடன் வீடுகள்தோறும் சென்று விவரங்களைச் சேகரிக்கவுள்ளனா்.

அவா்கள் வழங்கும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து 2 நாள்களுக்குப் பின்னா் வழங்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட படிவத்தை சரிபாா்த்து கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்வா். அதன் பின்னா் அக்குடும்பத்துக்கு தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய (கனவு) அட்டை வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஆட்சியா் தலைமையில் ஏற்கப்பட்டது. தொடா்ந்து, நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள காலபைரவா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்றாா்.

இக்கூட்டத்தில் தருமபுரி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமாா், துணை இயக்குநா் (தொழுநோய்) புவனேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரேசன், பொன்னரசன் உள்ளிட்ட அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com