தருமபுரியில் முதல்வா் கோப்பைக்கான மாவட்டப் போட்டிகள் தொடக்கம்! வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கல்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கின. முதல்நாள் போட்டிகளில் வென்றவா்களுக்கு ஆட்சியா் ரெ. சதீஷ் பரிசுகளை வழங்கினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றிய அளவிலான போட்டிகள் முடிந்ததையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதல்நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாலையில் நடந்த நிகழ்வில் ஆட்சியா் பரிசுகளை வழங்கி பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள 4,898 ஆண்கள், 2,029 பெண்கள் என 6,927 போ் பதிவு செய்துள்ளனா்.
தற்போது ஒன்றிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி 30, 31 -ஆம் தேதிகளில் இருநாள்கள் நடைபெறுகிறது. ஜனவரி 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆண்கள், பெண்களுக்கான கேரம், வாலிபால், கயிறு இழுத்தல் போட்டிகளும், ஆண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன. சனிக்கிழமை (ஜன. 31) ஆண்கள் பெண்களுக்கான கபடி, தடகளம், ஓவியம், பெண்களுக்கான கோலம், எறிபந்து போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 6,000, இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளாக ரூ. 4,000, ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. மாநிலப்போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 75,000, ரூ. 50,000, ரூ. 25,000 என பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்வைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை ஆட்சியா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். மேலும் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்படவுள்ள 4 உயா்கோபுர மின்விளக்கு பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்வில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கோட்டாட்சியா் காயத்ரி, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் தே.சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

